வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

2012-ல் உலகம் அழியப்போகிறதா?

       1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ  மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ‘குவாதிமாலா' அளவில் மிகச் சிறிய நாடு என்பதோடு, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இனக் கலவரங்களால் அளவுக்கதிகமான அராஜகங்களையும், அத்து மீறல்களையும் சந்தித்த சபிக்கப்பட்ட தேசமது.
           2012-ல் இந்த உலகம் பேரழிவுக்கு இரையாகும் என்றும், நில அதிர்வுகளாகும், கட்டுக்கடங்கா வெள்ளத்தினாலும் மக்கள் பலியாவார்கள் என்றும் ஒரு தரப்பினர் ஆரூடங்கள் சொன்னபடி இருக்கின்றனர். இதை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் ஆங்கிலப்படங்கள் தயாராவதும், அவை கோடி கோடியாக வசூல் செய்வதும் தொடர்ந்தபடி இருக்கின்றன. உலகம் அழிவதற்கான வருடமாக 2012-ஐ எப்படிச் சொல்கிறார்கள்? எந்த உலகமகா ஜோதிடன் இதைக் கணித்தது என்ற கேள்வி எல்லோரிடத்திலும் இருக்கும்.
         இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் இதுபோன்ற மாந்திரீகங்கள், ஆரூடங்கள் பற்றிய நம்பிக்கையாளர்கள் அதிகம். உலகம் முழுக்க பரவலாக இவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் இருந்தாலும், மெஸோ அமெரிக்கன்களில் ஒரு பிரிவினரான ‘மயன்' எனும் இனத்தவர்களின் ஆரூடங்கள், அசரீரிகள் மீது அதிக நம்பிக்கை உடையவர்கள். பல ஆயிரமாண்டுகளுக்கு முன் குவாதிமாலா, மெக்சிகோ, சிலி, கொலம்பியா போன்ற நாடுகளில் வாழ்ந்தவர்கள் ‘மயன்' இனத்தவர்கள். வேட்டையாடுதலும், மேய்ப்புத் தொழிலும் இவர்களின் பிரதானமான வாழ்வாதாரங்கள். இவர்களுக்கென நுட்பமான, தொன்மையான கலாச்சாரமிருந்தது. கிட்டத்தட்ட தமிழர்களைப் போல உயர்ந்த நாகரீகமும் , அறிவியல் மற்றும் வானவியல் துறையில் பரந்துபட்ட அறிவும் கொண்டவர்கள் மயன்கள்                                                                                                                                                                                                                                                                                      கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடியடைந்த போதுதான் (உண்மையில் அவர் இந்தியாவைக் கண்டறியும் நோக்கில் பயணித்து, தவறாக இந்தியா என நினைத்து அமெரிக்காவில் இறங்கினார்) ஐரோப்பியக் குடியேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகே முறைமைப் படுத்தப்பட்ட எழுத்துமுறை பரவலாக அப்பகுதிகளில் ஏற்பட்டது. ஆனால் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் (‘மாயன்கள் வாழ்ந்த பகுதிகளில்) எழுத்துமுறை மொழியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமானதொரு விஷயமாகும். அது மட்டுமல்லாமல் வானியல் மற்றும் கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.
                    அவர்களது எண்கள் பயன்பாட்டு முறையை விளக்கும் படத்தினைப் பார்த்தால், அதில் அவர்கள் பூஜ்ஜியம் மற்றும் கோடுகளை வைத்துக் கணக்கிட்ட முறை புரிபடுகிறது. கணினித்துறையில் இருப்பவர்களுக்கு, கணினியின் அடிப்படை அமைப்பியல் சூத்திரம் 1,0 என்று இரண்டு எண்ணை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டது என்பது எளிதாகப் புரியும். கிட்டதட்ட மாயன் எண்கள் அதே போல் இருப்பது கண்டு வியப்பாயிருக்கிறது.
           மயன்கள் கணிதத்துறையிலும்,கட்டடக் கலையிலும்கூட மிகத் திறன்பெற்றவர்களாய் இருந்தவர்கள். மயன்கள் தொன்மைக் காலத்திலேயே அவர்களின் வாழ்விடங்கள், வழிபடும் தலங்கள் ஆகியவற்றை பிரமிடுகள் வடிவத்தில் கட்டியிருந்தனர். அவர்களது கட்டடக் கலை பிரமிக்கத் தக்க அளவு நுட்பங்களோடு அமைந்திருந்தன. தொல்பொருள் ஆய்வாளர்கள் இன்றும் மெஸோ அமெரிக்க இனக்குழுக்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களின் கட்டடங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
          ‘யுனெஸ்கோ' அமைப்பு மெஸோ அமெரிக்கர்களின் வசிப்பிடங்கள், வழிபடும் தலங்கள் பலவற்றை உலகம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ‘கலாச்சார சின்னங்களாக' அறிவித்திருக்கிறது. மயன் இனத்தவர்கள் வாழ்ந்த ஆதிகாலத்திலேயே ‘மயன் காலண்டர்' ஒன்றை உருவாக்கியிருந்தனர். அந்தக் காலண்டர் நாட்களை அடையாளப்படுத்தும் கணக்கீட்டுக்கானதாக மட்டுமல்லாமல், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் நடக்கக் கூடிய விஷயங்களையும் ஆரூடங்களையும் பதிவு செய்திருந்தனர். ‘நான்ஸ்டர்டாம்' என்பவர் பல நூறு வருடங்களுக்கான ஜோதிடக் கணிப்புகளைப் பாடல்களாகக் குறிப்பிட்டது போல சிக்கலான குறிப்புகளாக அல்லாமல், அறுதியிட்டு சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.
            மயன்களின் பிரதானக் கடவுள் சூரியன்தான். வானில் நிகழும் கிரகணங்கள், தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது கணிப்புகள் இருந்தன. உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய காலம் வரையிலான நாட்களை ‘சூரிய காலம்' என்று ஒட்டுமொத்தமாக குறிப்பிட்டாலும், சில ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய தொகுப்புக்களாகப் பிரித்தனர். அவர்களின் கணக்குபடி, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டம் ‘ஐந்தாவது சூரிய காலம்' என்றும், டிசம்பர் 21, 2012-ல் இந்த உலகம் அழிந்துவிடும் என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கணித்திருக்கின்றார்கள். அந்த மயன் காலண்டரை அடிப்படையாக வைத்துதான், ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர்கள் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டபடி இருக்கிறார்கள்.
           மயன் இனத்தவர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் ஸ்பெயின் ஆக்கிரமித்துக் கைப்பற்றியபின், ஸ்பானிய மக்களோடு இணைந்து ஒரு புதிய கலப்பினமாக மாறிவிட்டனர். மயன் இனத்தவர்களின் கலாச்சாரம், பண்பாடு, மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. எஞ்சியிருக்கும் மயன் இனத்தவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு சிறுசிறு இனக்குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். ஸ்பானியர்களின் அடக்குமுறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு, மேம்பாடற்ற சமூகமாக இன்று சீரழிந்து கிடக்கிறது. பிரிந்து கிடக்கும் இனக்குழுக்களுக்குள் கடுமையான உள்நாட்டுப் போர்கள், கணக்கற்ற உயிர்ப்பலிகள், கலாச்சார அழித்தொழிப்பு என்று சிதறுண்டு கிடக்கும் அவர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டதால் ‘மெஞ்சு'வுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
           மயன் இனத்தவரில் ‘குச்சே' என்ற பிரிவில் 1959-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி குவாதிமாலாவில் பிறந்தவர் ரிகபெர்டோ மெஞ்சு. பசிபிக் பெருங்கடலின் கரையோரப் பகுதியில் வாழ்ந்த அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் காபி தோட்டங்களில் வேலை பார்த்தனர். மெஞ்சு, தனது பதின்ம பருவத்திலேயே சமூக சேவைகளில் ஈடுபடத் துவங்கினார். மெஞ்சுவின் குடும்பத்தினர் வழிபட்ட கத்தோலிக்க திருச்சபையின் மூலமாக அவரது சமூகப் பணி துவங்கியது.
          குவாதிமாலாவில் உள்ள இனக்குழுக்கள் தங்களுக்கென்று கொரில்லாப் படையொன்றை வைத்திருந்தனர். கொரில்லாப் படையினர், அடுத்த இனக்குழுவைச் சார்ந்தவர்களைக் கடத்துவதும் சித்ரவதை செய்வதும் அன்றாட நிகழ்வுகளாயிருந்தன. மெஞ்சுவின் தந்தையையும் ஒரு இனக்குழு கடத்திச் சென்று சித்ரவதை செய்தது. பல நாட்கள் அவர்களின் துயர் தரும் கொடுமைகளை அனுபவித்து மீண்ட பின், இனக்குழுக்களுக்கிடையே அமைதி ஏற்படுத்தும் குழுவில் உறுப்பினராகி தேசத்தின் அமைதிக்காக உழைக்கத் துவங்கினார்.
          தந்தையின் வழியிலேயே மெஞ்சுவும், 1979-ல் அமைதிக்குழுவின் உறுப்பினராகி, இயங்கத் துவங்கினார். இனக்குழுக்களுக்கு இடையே மோதல்களும் உயிர்ப்பலியும் பாலியல் கொடுமைகளும் பெருகிக் கொண்டே போயின. மெஞ்சுவின் சகோதரன் நிக்கோலஸை ஒரு குழுவினர் கடத்திச் சென்று கொன்றனர். மெஞ்சுவின் தாயைக் கடத்திச் சென்று வேறொரு குழு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தத் துயரங்களிலிருந்து மீள்வதற்குள், அமைதிக்குழு பணிக்காக ஸ்பெயின் தூதராக அலுவலகத்திலிருந்த மெஞ்சுவின் தந்தையை குவாதிமாலா பாதுகாப்புப் படை, கொரில்லாக் குழுவொன்றைத் தாக்கும்போது கொன்றுவிட்டது. தன் குடும்ப உறுப்பினர்களை பலியிட்ட இனக்குழு மோதல்களை நிறுத்தும் பணியில் மெஞ்சு இன்னும் அதிதீவிரமாக இயங்க ஆரம்பித்தார்.
         மயன் மொழியில் பயின்றவராக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பானிஷ் மொழியை தன்னெழுச்சியாக கற்றுத்தேர்ந்த மெஞ்சு, மயன் இன மக்களுக்கும், இந்திய வம்சாவழி மக்களுக்கும் கல்வியறிவைப் புகட்டும் பணியில் ஈடுபட்டார். குவாதிமாலாவின் இராணுவ ஆட்சியாளர்களின் எதிர்ப்புக்கிடையேதான் இந்தப் பணியை அவர் செய்ய வேண்டியிருந்தது.
          மெஞ்சுவின் தீவிர சமூகப்பணிகளையும், அவருக்குப் பெருகி வரும் ஆதரவையும் கண்ட குவாதிமாலா அரசு, அவரை எதிரியாக பாவித்தது. அவரது பணிகளுக்கு முடிந்தவரை முட்டுக்கட்டை போட்ட அரசு, தொடர்ந்து அவருக்குத் தொல்லைகள் தந்தது. ஒரு கட்டத்தில் அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தபடி இருந்தன. பாதுகாப்பற்ற சூழலில் வேறு வழியின்றி 1981-இல் அவர் மெக்சிகோவிற்குத் தப்பி தலைமறைவானார்.
 அங்கிருந்தபடியே குவாதிமாலாவின் ஜனநாயக மலர்ச்சிக்கும், மயன் மக்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தபடி இருந்தார். அவரது வாழ்வியல் அனுபவங்களைக் கேட்டறிந்த எலிசெபத் டெப்ரே என்பவர் அவற்றை ஒரு புத்தகமாக்கினார். அந்தப் புத்தகம் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியதோடு, மெஞ்சுவை நோக்கி அனைவரது கவனத்தையும் திருப்பியது. குவாதிமாலாவின் எதிர்க்கட்சிகள் அவருக்குப் பெருகிவரும் ஆதரவைக் கண்டு, தங்கள் கூட்டமைப்பில் அவரை இணைத்துக் கொண்டது.
          மெக்சிகோவில் இருந்தபடியே குவாதிமாலா அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார் மெஞ்சு. ‘RUOG' எனும் குவாதிமாலா அரசியல் கூட்டமைப்பின் முக்கியப் பதவியொன்று அவருக்குத் தரப்பட்டது. அதில் இயங்கும் பொருட்டு, குவாதிமாலா திரும்பிய மெஞ்சுவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களும் தொடர்ந்தன. அவரது நலம்விரும்பிகள், அவருடைய உயிருக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் அவரை மெக்சிகோவுக்கு பத்திரமாகத் திருப்பியனுப்பினர்.
          1960-ம் ஆண்டு துவங்கிய இனக்கலவரங்கள் பலதரப்பு முயற்சிகள் மற்றும்  மெஞ்சுவின் இடையறாத அமைதிப் பணிகள் காரணமாகவும் ஒருவழியாக 1996-ல் முடிவுக்கு வந்தது.  குவாதிமாலா மெல்ல மெல்ல ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி, பொதுத் தேர்தலுக்குத் தயாரானது. மெஞ்சுவின் தலைமையில் ஒரு புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டது. பொதுத் தேர்தலில் அவரது கட்சி உறுப்பினர்கள் போட்டியிட்ட இடங்களில் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. மெஞ்சு, அந்தத் தேர்தலில் குவாதிமாலா அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றுப் போனார். தேர்தலில் விளையாடிய  எதிராளிகளின் தாராள பணப்புழக்கமும், மெஞ்சு சார்ந்த ‘குச்சே' இனத்தவர் தவிர மற்ற இனத்தவர்கள் அவருக்கு வாக்களிக்காததும் அவரது தோல்விக்குக் காரணங்களாக சொல்லப்பட்டன.
           மெஞ்சுவின் நோக்கம் அதிபர் பதவியல்ல மயன் இனத்தின் மீட்சிதான், என்பதால் உலக நாடுகளில் அவரது செல்வாக்கு குறையவேயில்லை. ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக அவர் நியமிக்கப்பட்டார். மெஞ்சு அப்பணியில் இருந்த போது, நோபல் பரிசு பெற்ற பிற பெண் சமூகவியலாலர்களை ஒருங்கிணைத்து, உலக அமைதிக்காகவும், குவாதிமாலா தேச அமைதிக்காகவும் பெருமுயற்சி செய்தார்.
          அவரது சுயசரிதை எந்த அளவு பரபரப்பையும் ஆதரவையும் பெற்றுத் தந்ததோ அது போலவே பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அவரது புத்தகத்தில் சொல்லப்பட்ட தகவல்கள் குறித்துப் புலனாய்வு செய்த டேவிட் ஸ்டோல் என்பவர், அவரது புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணானவை என்று அறிவித்தார். இந்த சர்ச்சை காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திரும்பப் பெறுமாறு, ஒரு சிலர் குரலெழுப்பினர். ஆனால், நோபல் பரிசுக் குழு அவருக்குத் தரப்பட்ட பரிசு, அவரது அமைதி நடவடிக்கைகளுக்குத் தானே தவிர, அவரது புத்தகத்துக்கில்லை என்று அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
          திருத்தி அமைக்கப்பட்ட தனது சுயசரிதத்தை, ‘எல்லைகளைத் தாண்டி' என்ற பெயரில் மெஞ்சுவே எழுதி வெளியிட்டார்.
 இனத் துவேஷங்கள், அன்னிய மொழி ஆதிக்கத்தால் வழக்கொழிந்து போன மயன் மொழி, அடிப்படை பொருளாதாரமற்ற சூழல், ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தல்  போன்றகாரணங்களால் இன்று மயன் இனம் அழிந்து கொண்டிருக்கிறது. மெஞ்சுவுக்குத் தரப்பட்ட நோபல் பரிசு இனக்குழு மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்ததாக மட்டும் கருதி விடக் கூடாது. அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனத்தின் தன்னெழுச்சிக்கான  விதையாக மெஞ்சு திகழ்வதாலும்தான்...
          பல்வேறு இழப்புகளுக்குப் பின்னும், துயரமான சம்பவங்களுக்குப் பிறகும், அச்சுறுத்தும் சூழல்களுக்கிடையேயும்,மெஞ்சுவின் அமைதிப்பணி இன்றும் தொடர்கிறது. உலகின் அழிந்து வரும் இனமாக ‘மயன்' இனம் காணப்பட்டாலும், ‘மயன்' இனத்தின் அழிக்க முடியாத அடையாளமாக பெண்ணினத்தின் தனிப்பெரும் எழுச்சிக்குரலாக ‘ரிகபெர்டோ மெஞ்சு' தென் அமெரிக்க நாடுகளில் கருதப் படுகிறார்.
   
          2012 -ல் உலகம் அழியப்போவதாக சொல்லப்படும் ஆருடங்கள், அனுமானங்களை எந்த அறிவியல் மனமும் ஒப்புக்கொள்ளாது. ஆனால் மொழிமற்றும் கலாச்சாரங்களின் மீது தொடுக்கப்படும் எதேச்சதிகார படையெடுப்புகளை பற்றிய எச்சரிக்கையாக கருத முடியும். உண்மையில் மெஞ்சுவின் கவனத்தில் இது போன்ற ஆருடங்கள், அனுமானங்கள் முக்கியத்துவம் பெறவில்லை. அவருடைய முனைப்புகள் முழுவதும் அவரது இனத்தின் மீட்பிலும்  , மொழியின் உயிர்ப்பிலும் இருக்கின்றன. வழக்கம் போல சர்வ வல்லமை பொருந்திய வணிகர்கள்தான் இவற்றை ஊதிப் பெருக்குகிறார்கள் அட்சய திரிதியைப்போல
            எதிர்காலத்தில் அழியக்கூடும் என்ற யுனெஸ்கோவின்  பட்டியலில் தமிழும் இருப்பதாக கருதப்படுகிறது. தேசத்தின் எல்லைக்கு வெளியேயும், தேசத்துக்குள் வரையறுக்கப்பட்ட எல்லைகளிலும் தமிழ் மற்றும் தமிழர்கள் மீதான அராஜக கட்டவிழ்ப்புகள் நம் இனத்தின் எதிர்காலம் குறித்த அச்சங்களை முன் நிறுத்துகின்றன.

            இப்போது நம் முன் இருக்கும் கேள்வி 2012-ல் உலகம் அழியுமா என்பதல்ல இந்த உலகம் இருக்கும் வரை நம் இனம் இருக்குமா?
                                       ____________

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...