திங்கள், 7 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 3

உன் காதலி:

     “கடவுள் வரைந்த
     ஒரே ஓவியம்
     நீ!”

அலைபேசியை மெல்ல உயிர்ப்பித்தேன். உன் முகமும் வரிகளும் தெரிந்தது. அடிக்கடி எல்லாக் காதலர்களும் சொல்லும் வசனத்தை நீயும் சொல்வதுண்டு. “நான் மரணமடைந்து விட்டால் நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்” என்பதுதான் அது.


நான் பத்தாம் பசலியல்ல. இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்காவிட்டாலும் என் பதில் இதுதான். “நான் யாருடைய அடிமையுமில்லை. நமக்குள்ளான உறவில் ஏதேனும் கசப்புகள் ஏற்பட்டால் கூட நான் உன்னைச் சார்ந்தவளாக இருக்கமாட்டேன். நமக்குள் அப்படியெல்லாம் நேர்ந்துவிடக் கூடாது” என்பதுதான் என் ஆசை.

எந்த உத்திரவாதமும் இல்லாத இந்த வாழ்க்கையில், ஒரே உத்திரத்தைப் பிடித்துத் தொங்க நான் ஒட்டடைப் பூச்சியல்ல... என்றாலும் உன்னை நெருக்கமாக நேசிக்கிறேன். என்னுள் புதைந்து போன நீ, அவ்வப்போது என்னைக் கிளறும் போதெல்லாம் பூவாக மலரும் என் அகமும் முகமும். கடினப்பட்ட என்னையே இப்படி இயக்க முடிகிறதென்றால்... காதல், கொஞ்சம் வலியதுதான். கூடவே வலியும் மிகுந்தது தான்!

     நீயும் நானும்
     உயிரும் உடலும்
     நீ உயிர்
     நான் உடல்
     எனவே தான்
     நீ பிரிந்த பிறகு
     நானே வெந்து போகிறேன்.

என்ற உன் உளறல் மீது எனக்கு அக்கறையில்லை. இந்தப் பொய்யும், புனைச்சுருட்டும் என்னை ஆயாசப் படுத்துகிறது. அப்படி ஒருவர் மட்டும் வெந்து போவது எப்படிக் காதலாகும்? என்றாலும், நீ கோபமாகக் கிறுக்கியெறிந்த அந்தத் துண்டுக் காகிதத்தை நான் பத்திரப்படுத்தி, என் டைரியின் அந்த நாள் பக்கத்தில் ஒட்டி வைத்திருக்கிறேன். இச்சிறு பைத்தியக்காரத்தனம் கூட இல்லையென்றால் காதல் எப்படி...?!

வேடிக்கை என்னவென்றால், பார்க்கும் போதும், பார்க்கத் தவறிய போதும் பிதற்றிய நீ, இப்போது தன்னிச்சையாக என்னைப் பிரிந்து வெகு தொலைவில்... எதிலும் அசைந்து கொடுக்காத நானோ உன்னைப் பற்றிய நினைவுகளின் கொதிப்பில்... வினோதம் தானே!

காத்திருப்பதில் உனக்கு சலிப்பு அதிகம். எனக்கோ காத்திருப்பது அத்தனை சுகம். உன்னை வர்ணித்தபடி, உன் நினைவுகளைக் கோதியபடி, நம் எதிர்காலத்தை அலங்கரித்தபடி இருப்பதற்கான அவகாசங்களைப் புறக்கணிப்பதில்லை.

ஆனால், இது காத்திருப்பில்லை. கை தவறி நழுவவிட்ட கையிருப்பு என்ற நிஜம் சுடுகிற போது... எனக்கான தகவல்களைச் சுமந்திராத காற்றைச் சபித்தபடி நிற்கிறேன்... தனியானதொரு வனத்தில் தன்னந்தனியளான உணர்வுடன்...

எங்கேயிருக்கிறாய் நீ...?
விமானத்தில் ஏறும் முன் செய்திகள் வந்தன குறுந்தகவல்களாய்...

1. அபி, இப்பொழுது நான் மும்பையில்... நினைவில் உன்னைச் சேகரித்தபடி...

2. அப்பாவிடம் சொல். நான் மிக பத்திரம்.

3. விமான நிலையத்தில் சோதனை செய்யும் பகுதியில்...
   வெளியேறும் போது கூட சோதனை...

4. என் இருக்கை ஊர்ஜிதம்... என் தேசத்தில் என் இடம்...?

5. வருகிறேன்.

அதன் பிறகு எந்தப் பறவை உன்னைத் தூக்கிச் சென்றது? உன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் நம்பக்கூடியதாயில்லை. சென்றயிடத்தில் நீ குற்றவாளியாக கைதாகி, மரணதண்டனையைப் பரிசீலிக்க மனுச் செய்துவிட்டுக் காத்திருப்பதாகச் செய்திகள் வந்தபோது தான் எனக்குள் ஒளிந்திருந்த இன்னொருத்தியைக் கண்டுகொண்டேன், எல்லோரும் நினைப்பது போல் நான் அத்தனை உறுதியானவள் இல்லை பார்த்தி...ஒவ்வொரு கற்களாக நழுவுகிறது என் காலடியில். யதார்த்தம் சுகமாக இருக்கின்றவரை எல்லா நிலைப்பாடும் உறுதியாக இருக்கிறது. இருந்தாலும் நான் விடப் போவதில்லை பார்த்தி... உன்னைக் காப்பாற்ற ஒவ்வொரு சாத்தியப்பாட்டையும் முயற்சிக்கிறேன்.

மரண வாயிலில் நிற்கும் உன்னைத் திருமணம் செய்வதாக மனுச் செய்தால் உன் தண்டனையைக் குறைக்க முடியுமா என்று கூட முயற்சிக்கிறேன். குறைந்த பட்சம் தள்ளிப் போட முடியாதா என்று தவிக்கிறேன். அந்த நாட்டின் விதிகள் அத்தனை சுலபமில்லை என்று லாயர் சொன்னார். இருந்தாலும் நான் விடப் போவதில்லை. உன்னைக் காப்பாற்ற உதவும் சிறு துரும்பையும் நான் துச்சமாகக் கருதப் போவதில்லை.

சட்டங்களோ மனசாட்சியோ கட்டுப்படுத்தாத அந்த தேசத்தில் தகவலற்றுத் தவிக்கும் உன் காத்திருப்பு எத்தனை கொடூரமென்று எனக்குத் தான் தெரியும். கிரகங்களுக்கான பரிவர்த்தனைக்காக, பாஷைகளைக் கொத்தாக அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் விஞ்ஞானியைப் போல எனக்குத் தெரிந்த, உனக்குப் பரிச்சையமான அத்தனை சொற்களையும் அனுப்பியபடி அலைமோதுகிறேன்.

உன்னுடைய பிதற்றல் கவிதைகளையும் இப்போது ரொம்பவும் நேசிக்கிறேன் பார்த்தி...

பறந்து செல்வது எனக்கும் கொள்ளைப் பிரியம் தான். பிரிந்து செல்வதில் வரும் உபாதைகள் இல்லாத பட்சத்தில்... உனக்கு மட்டும் ஏன் இதில் இத்தனை பிடிவாதம்...? பறந்து செல்வது எப்பொழுதும் ஆனந்தமான விஷயமாகத் தோன்றுவது நடந்து செல்பவர்களின் கனவுதான் என்பது என் கணிப்பு. ஒவ்வொரு பறவையும் பறக்கும் போதும் அது, அதன் தவிப்பாகவே படுகிறது எனக்கு. தரையிறங்கிய பின், அதன் கண்களில் தெரியும் அலைகழிப்பு, எதையோ தேடுவது போல இருக்கும். சிலசமயம் தான் கைவிடப்பட்ட பிறவி என்று பறைசாற்றுகிறதோ என்று கூடத் தோன்றும். இப்பொழுதெல்லாம் எந்தப் பறவையைப் பார்த்தாலும் உன் முகம்தான் தெரிகிறது பார்த்தி... தரையிறங்கிய பறவை நீ... மீண்டும் பறக்க முடியாதபடிக்கு கூண்டிலடைக்கப் பட்ட பறவை நீ...

ஆனால், இப்பொழுது எனக்குப் பறவையாகிடும் வரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்! பறந்து வந்து உன் தோளிலோ, மடியிலோ கிடந்திருப்பேன். காதலிக்கும் போது உணர்வுகள் துடிதுடித்தபடியிருக்கும். அறிவு மழுங்கி, அமுங்கி விடுகிறதென்பேன் நான். உனக்கதில் உடன்பாடில்லை. காதலே அறிவு தான் என்பாய். காதலென்பது ஒருவித நெருக்குதல், சந்தர்ப்பங்கள் தரும் சூழலே காதலைத் தீர்மானிக்கிறதென்பேன். உன்னிடமிருந்து அதற்கும் மறுப்பு வரும். எல்லாவற்றிலும் உனக்கு என்னிடமிருந்து மாறுபாடான கருத்து உனக்கு உண்டு. ஆனால், ஒருபோதும் நீ என்னை மறுத்ததுமில்லை, வெறுத்ததுமில்லை. எல்லா தர்க்கங்களும் சண்டையில் வந்து நின்றாலும், நீ காதலுடன் சொல்லிவிட்டுப் போவாய் கடைசியிலும் ‘ஐ லவ் யூ' என்று...

கருணைத் தெறிக்கும் விழிகளைத் தேடித் தவிக்கிறேன் பார்த்தி... ஒற்றைக் கம்பியைக் காட்டி, இதில் நடந்து சென்றால் பார்த்தியின் உயிரைக் காப்பாற்றி விடலாமென்று யாராவது சொன்னால் கூட போதும். எந்தக் கேள்வியும் கேட்காமல் கம்பியின் மீது ஏறி நிற்கத் தயாராயிருக்கிறேன் உனக்காக... பற்றிக் கொள்ள எந்தக் கொழுகொம்பு கிடைத்தாலும் போதும். கைகளை நீட்டியபடி அலைபாய்கிறேன். இதுவும் ஒருவிதத்தில் நெருக்குதல் என்பதால்தானோ உன் மீதான என் காதலின் கனபரிமாணம் இன்னும் அதிகரித்து விட்டது பார்த்தி.

என்னையும் உன்னையும் பற்றித் தெரிந்தவர்கள் எனக்கு ரகசியமான ஒரு ஆலோசனையைத் தந்தபடி இருக்கிறார்கள். “நல்லவேளை... இன்னும் கல்யாணம் நடக்கலை. அதுவரைக்கும் தப்பித்தாய். இத்தோட மறந்து கை கழுவி விட்டுடு. வேற ஒரு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் செஞ்சு நிம்மதியாயிரு. அவன் ஜாதகத்துல ஆயுசு பலம் அவ்வளவுதான் போல இருக்கு” என்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது பாவம். எப்போது என் மனம் உனக்குள் அமுங்கிக் கரைந்ததோ அப்போதே நமக்குள் கல்யாணம் முடிந்து போனதென்று.

ஏதோ ஒரு சாகஸத்துக்காக இதைச் சொல்லவில்லை பார்த்தி... நிஜமாகவே உன்னுடனான சந்திப்புகளின் நினைவுகளோடு வாழ்வதற்கே இந்த ஜென்மத்தில் மிச்ச நாட்கள் போதாது பார்த்தி...

காதலையும் வாழ்க்கையையும் கனவுகளால் அலங்கரிப்பவன் நீ. உன்னுடனான சந்திப்புகள் தமிழிலக்கிய வகுப்புகள் போல... திகட்டத் திகட்டத் தேனூறும்.

என்னுடையவையெல்லாம் ஃபார்முலாவுக்குள் அடைக்க முயலும் வேதியியல் பரிசோதனைக் கூடம் போல. இந்த இனிய முரண் தான் நம்மைச் சேர்த்ததும், நமக்குள் அடிக்கடி ஊடல் வரவும் காரணமானதோ தெரியவில்லை. ஆனாலும் உன்னை ரொம்பவும் நேசிக்கிறேன் பார்த்தி. ஒத்த கருத்துகள் உள்ளவர்களோடு என்னால் அதிக நேரம் ஒத்துப் போக முடிந்ததில்லை. அது ஒரு சலிப்பான சமாளிப்பாகவே இருந்திருக்கிறது.

உன் கனவுகளின் வேகம் அபாரமானது. உன்னைக் கடல் கடந்து செல்ல அதுதானே வழிநடத்தியது...!

அதுவே உன்னை இருட்டறையில் தூக்குக்கயிற்றின் சுருக்கின் முன்னும் நிறுத்தி விட்டதோ... இப்பொழுது சொல். உன் கனவுகளின் வேகம் அபாயகரமானது தானே...!

உனது தண்டனையை ரத்து செய்வதற்கு நானெடுத்த அத்தனை முயற்சிகளும் தோற்றுப் போயின. நீ அடிக்கடி கேட்ட கேள்வி என் கண்முன் விஸ்வரூபமெடுத்து இன்று நிஜமாகி மிரட்டுகிறது.

“ஒரு வேளை நான் இறந்து போனால்...?” என்ற உனது பிரகடனத்துக்கே மறுபடி வருகிறேன்.

நானும் இறந்து போக மாட்டேன் பார்த்தி.

யார் உயிரையும் யார் பறிக்கவும் இயலாதபடிக்குக் குரல் கொடுப்பேன். கயிற்றின் முனையில் கழுத்தெலும்பு முறிபடும் சப்தம் எந்த தேசத்திலும் கேட்கக் கூடாதென உரக்கச் சொல்வேன்.

நீ சுவாசித்து விட்டுச் சென்ற காற்று இன்னும் மிச்சமிருக்கிறது எங்கும் மிதந்த படி... இன்னும் பல உயிர்களை ஜீவிக்க வைத்தபடி... என்னையும் சேர்த்து...
 
(இன்னும் இரண்டு...)

2 கருத்துகள்:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...