செவ்வாய், 13 ஜூலை, 2010

The Killing Fields

உலக வரைபடத்தில் வியட்நாமுக்கும், தாய்லாந்துக்கும் மிக அருகே அமைந்த வனப்புமிக்க சிறிய தேசம் கம்போடியா. நரவேட்டையாடிய ஹிட்லர், முசோலினி, இடிஅமீன், இராஜபக்சேவுக்கு இணையான கொடுங்கோலன் போல்பாட்டின் ஆட்சி காலம் கம்போடியாவின் இருண்ட காலம்.

அதிகார போதை தலைக்கேறினால் தனக்குத் தோன்றிய அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் அப்பாவி மக்கள் மீது திணிப்பதும் காரணமின்றி கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்றும் எலும்புக் கூடுகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி ரசிப்பதுமான மனவிகாரம் பிடித்தவன் போல்பாட்.

இயக்கம் : ரோலண்ட் ஜோஃப் (Roland Joffé)

போல்பாட்டின் ஆதரவு குழுக்கள் கம்போடியாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து கைப்பற்றிய காலத்தில் அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான நியுயார்க் டைம்ஸ் துணிச்சல் மிக்க நிருபர் சிட்னி ஷான்பெர்க் செய்தி சேகரிக்க கம்போடியா செல்கிறார். அவர் செல்கின்ற நேரம் மிகச்சரியாக அமெரிக்க அதிபர் நிக்சன் வாட்டர் கேட் ஊழலில் சிக்கியிருந்தார். அதிலிருந்து திசைதிருப்ப அமெரிக்க படைகளை கம்போடியாவின் முக்கிய நகரங்களின் ஒன்றான நியுக் லுங்-கில்(Neak Leung) குண்டு வீச அனுப்புகிறார். அமெரிக்க காங்கிரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க விமானங்கள் கம்போடியாவில் போல்பாட்டிற்கு ஆதரவாக குண்டுவீசக் காரணம்? போல்பாட் தன்னை கம்யுனிஸ எதிர்ப்பாளனாக காட்டிக் கொண்டதுதான். இயல்பாகவே நிக்சன் கம்யுனிஸ்டுகள் மீது கடும் வெறுப்பு கொண்டவர். ஒருமுறை ரஷிய அதிபர் குருசேவ்வை நேருக்கு நேராக “பன்றி” என்று திட்டியதால் கடும் கண்டனத்துக்கு ஆளானவர்.
ஒளிப்பதிவு : க்ரிஸ் மென்கஸ் (Chris Menges)
மற்ற பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பறப்பதை ‘வானிலை சரியில்லை’ என்று தந்திரமாக தடைசெய்திருந்ததால் சிட்னி இரண்டு மணி நேரம் தாமதமாக கம்போடியாவில் வந்து இறங்குகிறான். அவனுக்கு உதவி செய்யவும் மொழி பெயர்த்து சொல்லவும் காத்திருக்கும் உள்ளுர் நிருபர் டித் பிரான் நியுக்லுங்கில் நடந்த குண்டுவீச்சு பற்றிய தகவலை சிட்னியிடம் தெரிவிக்கிறான். சிட்னி இதுபற்றிய தனது சந்தேகங்களை அமெரிக்க இராணுவ தளபதியிடம் கேட்க, அவர் மழுப்பலான உறுதியற்ற பதில்களை சொல்கிறார். அதோடு சிட்னி நியுக் லுங் நகருக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

எப்படியும் அங்கு சென்று உண்மைகளை அறிந்து செய்தியாக்கிட துடிக்கும் சிட்னிக்கு பிரான் தனது தொடர்புகளை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக ரகசிய பயணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். இருவரும் நியுக்லுங் பகுதியில் குண்டுவீச்சில் மக்கள் படும் சொல்லவொன்னாத துயரங்களை செய்தியாகவும் புகைப்படங்களாகவும் சேகரித்து நியுயார்க் டைம்ஸ்க்கு அனுப்புகிறார்கள்.

அப்பட்டமான படுகொலைகள், அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் அவர்களை கெமர் ருத் எனும் குழுவினர் பிடித்துச் செல்கின்றனர். விடாமல் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி பிரான், சிட்னி மற்றும் இன்ன பிற பத்திரிகையாளர்களை காப்பாற்றி வருகிறான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பிரானுக்கும் சிட்னிக்கும் இடையேயான தொழில் ரீதியான நட்பு ஆத்மார்த்தமாகத் தொடர்கிறது. இந்த காலகட்டத்தில் கம்போடியா முற்றிலும் போல்பாட்டின் அதிகாரத்தில் கீழ் வந்து விடுகிறது. 1975-ல் அனைத்து வெளிநாட்டு பிரஜைகளையும் போல்பாட் வெளியேறுமாறு உத்தரவிடுகிறான். கம்போடியா மக்களின் நிலைமை படுபாதாளத்துக்குள் வீழ்ந்தது. நகரங்களில் வசித்தவர்கள் வலுக்கட்டாயமாக விவசாயம் செய்யும்படி பணிக்கப்பட்டு பயணற்ற பொட்டல் நிலங்களில் கொட்டடியில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இதற்கு பெயர் விவசாய புரட்சியாம். ஒரே நாள் இரவில் கம்போடியாவின் புழக்கத்திலிருந்த பணம் மொத்தமும் ஒரு இடத்தில் கொட்டப்பட்டு போல்பாட்டின் உத்தரவுப்படி எரிக்கப்பட்டது. வேலைசெய் அரசு கஞ்சி கொடுக்கிறது. இனி பணத்தின் தேவையென்ன என்பது போல்பாட்டின் வாதம்.

வெளிநாட்டு பிரஜைகள் வெளியேற விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பிரான்னின் மனைவி குழந்தைகள் அமெரிக்காவுக்கு புலம் பெயர சிட்னி தன் செல்வாக்கை பயன்படுத்தி முயற்சித்து வெற்றியும் பெறுகிறான். ஆனால் பிரான் அவர்களுடன் அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. சிட்னியும் அவனது நண்பர்களும் போலி பாஸ்போர்ட் ஒன்றை தயார் செய்து அதன் முலமாக பிரான்-ஐ கூட அழைத்துக் கொண்டு லாஸ் ஏஞ்ஜல்ஸ் செல்கிறார்கள். அவர்களை வழி அனுப்பிவிட்டு அழுது கொண்டே பிரான் விமான தளத்தை விட்டுச் செல்லும் அந்த காட்சி எவரையும் கலங்கச் செய்யும் நெகிழ்ச்சியான காட்சியாகும்.

பிரான் கம்போடியா படைகளின் பிடியில் சிக்கி சித்திரவதை படுகிறான். அங்கிருந்து தப்பிக்க முயற்சித்து மாட்டிக் கொள்கிறான். இரண்டாவது முறை வெற்றிகரமாக தப்பி, மற்றொரு ஆயுதக் குழுவிடம் சிக்கிக் கொள்கிறான். அந்த ஆயுதக்குழுவின் தலைவனது குழந்தைகளோடு அவனுக்கு நெருக்கம் அதிகரிக்கிறது. பிறிதொரு சமயத்தில் அந்த குழு மீது விமானங்கள் குண்டுவீச, குழந்தையோடு தப்பிச் செல்லும் வரைபடம், சிறிது பணத்துடன் தலைவனால் பிரான் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுகிறான். ஆனால் தப்பிக்கும் வழியில் கண்ணி வெடியில் சிக்கி குழந்தையும் துணைக்கு வந்தவர்களும் மரணமடைய பிரான் மட்டும் ஒருவழியாக தாய்லாந்து எல்லையில் அமைந்த செஞ்சிலுவை சங்க முகாமில் தஞ்சமடைகிறான்.

லாஸ் ஏஞ்சல்சில் பிரான்னின் குடும்பத்தினரை பத்திரமாக பாதுகாக்கும் சிட்னி அயராமல் பிரான் பற்றிய விசாரணை கடிதங்களை எல்லா செஞ்சிலுவை முகாம்களுக்கும் அனுப்பியபடி இருக்கிறான். பிரான் கிடைத்த செய்தி அறிந்து சிட்னி அவனை அழைத்து வந்து லாஸ்ஏஞ்சல்சில் அவனது குடும்பத்தினருடன் சேர்த்து விடுகிறான். சிட்னியுடன் நியுயார்க் டைம்ஸ்ல் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, நோயின் காரணமாக பிரான் இறந்து போகிறான். உண்மைச் சம்பவமான இந்த கதை சிட்னி எழுதிய பிரான்னின் “வாழ்க்கையும் மரணமும்“ என்ற நூலைத் தழுவி “தி கில்லிங் பீல்டு“ திரைக்கதையாக பரிணமித்தது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் போல் ஆகிவிடக்கூடிய அபாயம் உள்ள இந்தக் கதையை மிக நேர்த்தியான புருஸ் ராபின்ஸின் திரைக்கதையின் உதவியுடன் மிகச் சிறந்த படமாக இயக்கியுள்ள ஜோஃப்க்கு இது முதல் படம். யுத்த புமியின் அவலங்களை எவ்வித மிகை குறைவிமின்றி சொல்லியிருக்கும் இப்படத்தில் கம்போடியாவின் அரசியல் நிலவரங்கள் குறித்தோ அதன் அன்றைய ஆயுதக்குழுக்களின் நிலைப்பாடுகள் போக்குகள் குறித்தோ எதுவும் நேரிடையாக சொல்லப்படவில்லை என்றாலும் எல்லாவற்றையும் உணர முடிகிறது. முழுக்க முழுக்க ஒரு நிருபரின் பார்வையில் சொல்லப்படும் கதையாகவே காண்பிக்கப்படுகிறது.

படத்தில் ஊடுருவும் உணர்வுப்புர்வமான விஷயங்கள் பார்ப்பவர் மத்தியிலும், பரவசம் செய்வதில் ஒளிப்பதிவாளர் க்ரிஸ் மென்ஜாஸ்க்கு பெரும்பங்கு உண்டு. கலை இயக்குனரின் பங்கும் பாராட்டுதலுக்கு உரியது. படத்தின் முக்கியமாக பலவீனமாக இசையை குறிப்பிடலாம். பிரான் தப்பித்து மலைப்பகுதிகள் வழியே பயணிக்கும் காட்சிகளில் இசை பொருத்த மற்று,வேறொரு மனநிலைக்கு இட்டுச் செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

சிட்னியாக வரும் ஸாம்(Sam Waterston) நடிப்பும் பிரான் ஆக வரும் நோர் (Haing S.Ngor) நடிப்பும் வெகு இயல்பான யதார்த்தமான நடிப்பாகும். இருவரின் உடல்மொழி முகபாவங்கள் அந்த பாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றன.

கம்போடியாவில் நிகழும் அத்துமீறல்கள் குண்டுவீச்சில் ஏதுமறியா அப்பாவி மக்களின் துயரங்களை படத்தில் பார்க்கும் போது ஈழத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அட்டுழியங்களை நினைவுப்படுத்துகிறது. நடுநிலையான நிருபர்களை வெளியேற்றி, தனக்கு ஆதரவான நிருபர்களை அனுமதித்து ராஜபக்சே செய்த ஊடக வன்முறை போல்பாட்டின் ஊடகங்களை விஞ்சியவை.

நகரும் மரங்களாக, மின் கம்பங்களாக ஜன்னல் வழியே நம்மை கடந்து சென்ற காட்சிகளைப் போல் ஈழத்தில் நிகழ்ந்த அவலங்கள் சாட்சிகளற்று அரங்கேறிவிட்டன, ஏதும் செய்ய இயலாத கையாலாகத்தனத்துடன் நாம் ஒரு இரயில் பிரயான பயணிபோல் வெறும் பார்வையாளனாக இருந்தது மன்னிக்க முடியாத கொடுங்கோன்மையோ என்ற குற்ற உணர்ச்சி எழுவதை படம் பார்க்கும் போது தவிர்க்கவே இயலவில்லை.

டாக்டர் ஹெய்ங் நோர் கம்போடியாவில் உள்ள ஸாம்ரங் யுங்-ல் பிறந்தவர். மருத்துவர். அவரும் அவரது மனைவியும் போல்பாட்டின் படைகளால் எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டு சித்ரவதை கூடத்தில் மிக மொசமாக தண்டிக்கப்பட்டார்கள். அவரது மனைவி தொடர் சித்திரவதை காரணமாக உயிரிழந்தார். நோர் விடுதலை செய்யப்பட்ட பின். அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்தார்.

சிட்னியுடன் இருந்த டித் பிரான்-ஐ சந்தித்த பின் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள், ஜோஃப் பின்னாளில் நோர்-ஐ சந்தித்த போது அவரையே பிரான் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படிகேட்டுக் கொண்டார். இப்படத்தில் நடித்ததற்க்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது, கோல்டன் க்ளோப் விருது ஆகியன அவருக்கு கிடைத்தன. அதற்குப் பிறகு சில ஹாலிவுட் படங்களில் நோர் நடித்தார்.

துரதிர்ஷ்டவசமாக அவரை சில வழிப்பறி கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த கழுத்து சங்கிலிக்காக அடித்து கொன்றுவிட்டனர். போல்பாட்டிடம் தப்பித்த சில பிக்பாக்கெட்காரர்களின் கையில் அவரது மரணம் நிகழ்ந்தது விசித்திரம்தானே?

விருதுகள் : ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, துணை நடிகர் (நோர்)
ஆகியவற்றுக்காக 3 ஆஸ்கர் விருதுகள்.

கோல்டன் க்ளோப் விருதுகள், லண்டன் அகாடமி விருதுகள்.

2 கருத்துகள்:

  1. நண்பரே,
    நான் இப்போது தான் உங்கள் வலைப்புவுக்குள் வருகிறேன்.என்ன அருமையான படம் இது?
    அருமையான நடிப்பும்,இயக்கமும்,இசையும்,ஒளிப்பதிவும்,காலத்துக்கும் நினைவில் நிற்கும்,உலகசினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம்.
    இப்படத்தை பற்றி என் பார்வை இதோ.http://geethappriyan.blogspot.com/2009/11/1984.html

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி கீதப்பிரியன் உங்கள் வலைபூவுக்கு இன்றுதான் வந்தேன் அற்புதமாக இருந்தது பல அறிய படங்களை பற்றி எழுதியிருக்கிறிர்கள். தொடர்ந்து வாசிக்கும்படி சிறப்பாக எழுதியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள் -பாரதிக்குமார்

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...