சனி, 28 ஜனவரி, 2017

ஷின் சாங் ஓக் ( தென் கொரியா)            ஷின் சாங் ஓக் ( தென் கொரியா)


      சிலர் பிறக்கும்போதே கலகக்காரர்களாகப் பிறக்கிறார்கள். சமூகத்தின் சூழல் ஒரு சிலரை கலகக்காரர்களாக உருவாக்குகிறது. இன்னும் ஒரு சிலரை இந்த உலகம் கலகம் செய்யத்தள்ளுகிறது. இந்த மூன்றாவது பிரிவைச் சேர்ந்தவர்தான் தென் கொரியாவில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஷின் சாங் ஓக். தென் கொரியா ஜப்பானின் ஆளுமையிலிருந்து விடுதலைப் பெற்ற பிறகு தயாரான முதல் திரைப்படமான  Viva Freedom இல் தயாரிப்பு நிர்வாகியாக துவங்கிய ஷின்னின் திரைப்பட வாழ்க்கை அவர் 2006 ஆம் ஆண்டு இறக்கும் வரை இயக்குனராக, தயாரிப்பாளராக பல பரிமாணங்களில் தொடர்ந்தது.
      கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஷின், 300க்கும் அதிகமான படங்களை தனது ஷின் ஸ்டூடியோ மூலம் தயாரித்தவர். வர்த்தக ரீதியாகவும் கலாப்பூர்வமாகவும் அவரது படங்கள் அமைந்தன. கொரியப் படங்களை ஷின் சினிமா அவரல்லாத சினிமா என்று இரண்டாகப் பிரித்துவிடலாம் என கொரிய சினிமா விமர்சகர்கள் வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு.  The Evil Night, Prince Yeonsan, To the last day, Rice, 3 Ninjas Knuckle up, Pulgasari,  A Flower in Hell, Phantom queen  ஆகியன அவரது குறிப்பிடத்தக்க படங்களில் சில.. கொரிய சினிமாவின் பேரரசன் எனப் புகழப்பட்டவர் ஷின். அவரது காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த ஸோய் யூன் லீயை மணந்தார். ஸோய் யூன் ஹி 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். Sogum படத்தில் நடித்ததற்காக மாஸ்கோ திரைப்பட விழாவில் சிறந்த நடிகை பட்டம் பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மனக்கசப்புக் காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
      1952இல் துவங்கி 1970 வரை கொரிய திரைப்பட உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் ஷின். தென்கொரியாவின் ஆட்சி அதிகாரத்தை இராணுவ ஜெனரல் பார்க் சங் லீ பிடித்தப் பிறகு சட்டத்திட்டங்கள் கெடுபிடியாகின. திரைப்படத் தணிக்கைத் துறையில் அரசின் தலையீடுகள் துவங்கின. சுதந்திரமான திரைப்பட இயக்கத்தை கொள்கையாகக் கொண்டிருந்த ஷின்னின் திரைப்படங்கள் பலகடுமையான தணிக்கைக்கு ஆளாயின. இதனால் தனது அதிருப்தியை வெளிப்படையாக சொல்லத் தொடங்கினார் ஷின். அரசு ஷின்னின் படத் தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்டூடியோக்களை மூடச்செய்தது.
      1977ஆண்டின் இறுதி நாட்களில் ஷின்னின் மனைவி ஸோய் யூன் ஹி யை ஹாங்காங்க்- ஐச் சேர்ந்த  வாங்க் டாங் யில் என்பவர் சந்தித்தார். தான் ஹாங்காக்கில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன் சார்பாக ஒரு படத்தை இயக்கித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்காக ஸோய் யூன் ஹி எதிர்பார்க்காத, நம்பவே முடியாத ஒரு தொகையைத் தருவதாக உறுதி அளித்தார். ஸோய் யூன் ஹி விவாகரத்து பெற்றிருந்தாலும் ஷின்னின் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார். ஷின்னின் திரைப்பட நிறுவனத்தின் அலுவலகம் ஒன்று ஹாங்காக்கிலும் இருந்தது. எனவே ஷின்னிடம் இது குறித்து பேசிவிட்டு சொல்வதாக வாக்களித்தார் ஸோய் யூன் ஹி.
      ஷின்னிடம் இது குறித்து ஸோய் யூன் ஹி விவாதித்த போது ஷின்னுக்கு தாங்கமுடியாத ஆச்சரியம். கூடவே கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. தென்கொரியாவின் நம்பர் ஒன் இயக்குனர் தான்தான் தம்மிடம் கேட்காமல், ஒரு நடிகையாக மட்டும் பிரகாசித்த ஸோய் யூன் ஹி-க்கு அந்த வாய்ப்பு வந்ததை ஷின்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
      இருப்பினும் யூன் லீ வந்த வாய்ப்பை விடுவதாயில்லை. 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹாங்காக் பிரயாணமானார். வாங்க் அவருக்கு இரத்தினக் கம்பள வரவேற்பினைத் தந்தான். சொகுசான தங்கும் விடுதி, விருந்து, பரிசுப்பொருட்கள் என அவரைக் கொண்டாடினான். இரண்டு நாட்கள் அவனது உபசரிப்பில் திளைத்த யூன் லீ தான் வந்த வேலையைக் கூட மறந்து போனார். இடையில் ஷின்னின் அலுவலகம் சென்று அங்கு கம்பெனியின் நிர்வாகியை சந்தித்தார்.  மூன்றாவது நாள் வாங்க் அனுப்பியதாக லீ சாங் ஹீ என்னும் பெண்மணி தனது 12 வயது மகளுடன் வந்து யூன் லீயை சந்தித்தார். ஸோய் யூன் ஹி யை வானளாவப் புகழ்ந்தார். இந்த சந்திப்புதான் ஸோய் யூன் ஹி மற்றும் ஷின்னின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. சந்தித்த ஒரே நாளில் இருவரும் ரொம்பவும் நெருங்கிப்பழகிய தோழிகள் போல் ஆகினர். அடுத்த நாளும் மகளுடன் வந்த அந்தப் பெண் ஸோய் யூன் ஹியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு யூன் ஹி கிளம்பிய அந்த நொடியிலிருந்து யூன் ஹி மற்றும் ஷின்னின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு திகில் திரைப்படத்தின் திரைக்கதைக்கு இணையானவை. ஒரு வாடகைக்காரில் மூவரும் கிளம்பினார். செல்கிற வழியில் Repulse Bay என்கிற கடற்கரை அருகே சென்றதும் லீ சாங் திடீரென காரை நிறுத்தச் சொன்னாள். ஸோய் யூன் ஹியை இறங்குமாறு கேட்டுக்கொண்டாள். காரை திருப்பி அனுப்பியும் விட்டாள்.
      எதற்காக இங்கே இறங்கச் சொன்னீர்கள்?”
      இங்கே ஒருவரை சந்திக்கிறோம்
      முன்னரே நீங்கள் சொல்லவில்லையே.. நான் மாலை ஒரு விருந்துக்குச் செல்லவேண்டும்
      அதற்குள் கிளம்பிவிடலாம்.. நேரம் இருக்கிறது
      அந்தக் கடற்கரை போதைமருந்து கும்பல்களுக்கும், வழிப்பறிச் செயல்களுக்கும் பெயர் பெற்றது. Repulse Bay  என்ற பெயர் கூட அது ஆபத்தான இடம் என்னும் காரணத்தால் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்ட பெயர் பின்னாளில் நிலைத்துவிட்டது.
      அப்பொழுது நீண்ட தலைமுடியுடன் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அலைகளினூடே பறந்தபடி வந்தனர். ஒரு மோட்டார் படகு கடலில் அவர்களை நோக்கி வந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஸோய் யூன் ஹி- யை படகில் ஏறுமாறு கூறினர். யூன் ஹிமறுத்தபோது வலுக்கட்டாயமாக அதில் ஏற்றினர். அவ்வளவுதான் யூன் ஹி எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற தகவலே இல்லை. தென்கொரியாவெங்கும் யூன் ஹி காணாமல் போய்விட்டார் என்றுதான் தெரியுமே தவிர என்ன நடந்தது என்று தெரியாது.
      ஷின் சாங் ஓக் நிலைமையோ பரிதாபகரமாகிவிட்டது. ஏற்கனவே அவர் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்துவிட்டதால் லீ காணாமல் போனதற்கும் இவருக்கும் சம்மந்தம் உண்டோ என்ற பேச்சு பரவலாக கிளம்பிவிட்டது. அதுவுமல்லாமல் ஸோய் ஹாங்காக்கில் ஷின்னின் அலுவலகம் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. அப்போதைய தென்கொரிய அரசாங்கத்துடன் ஷின்னுக்கு நல்ல உறவில்லை எனவே ஷின்னுக்கு எதிரான வதந்திகளை அவர்கள் ரசித்தனர் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆக ஷின் தான் இப்பொழுது ஸோய் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
      ஷின் ஒரு திரைப்படக் கதாநாயகன்  போல ஸோய்யைக் கண்டுபிடிக்க ஹாங்காக் கிளம்பிவிட்டார். முதலில் அங்குள்ள தன் அலுவலகம் சென்று விசாரித்தார். ஏற்கனவே தென்கொரிய அரசாங்கத்தால் அது செயல்படவிடாமல் முடக்கப்பட்டதால், அங்குள்ள நிர்வாகிகள் பெயரளவுக்குத்தான் இயங்கிவந்தனர். அவர்களுக்கு ஸோய் தங்கியிருந்த ஹோட்டலில் என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
      ஹோட்டலில் அவர் யாருடனோ வாடகைக்காரில் சென்றதுவரை சொன்னார்கள். ஷின் அதே ஹோட்டலில் ஏதாவது தகவல் கிடைக்குமா என்ற தேடலுடன் தங்கியிருந்தார். ஒரு நாள் லீ Repulse Bay பக்கம் சென்றதை பார்த்ததாகக் கூறி சிலர் ஷின்னிடம் கூறினார்கள். அவர்களுடன் காரில் சென்றார். லீ கடத்தப்பட்ட அன்று என்ன நடந்ததோ அதுவே மறுபடி நடந்தது.  இந்த முறை ஷின்னிடம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கவில்லை. மயக்கமருந்து தூவிய சிறிய கர்ச்சீஃப்பை அவரது மூக்கில் வைத்து படகில் ஏற்றிவிட்டனர்.
      ஷின்னை அழைத்துச் சென்ற இடத்தில் டியர் லீடர்' என வந்தவர்களால் அழைக்கப்பட்ட கிம் ஜோங் யில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். வடகொரியாவின் அடுத்த அதிபர் என கருதப்பட்ட கிம் புன்னகையுடன் வடகொரியாவுக்கு வருகைத் தந்திருக்கும் ஷின் சாங் ஒக்கை அன்புடன் அழைக்கிறேன்என்றார். அப்பொழுதுதான் ஷின் தான் வந்திருப்பது வடகொரியாவின் தலைநகர் பியான்யோங் என்பது புரிந்தது. சர்வாதிகார நாடான வடகொரியாவில் கிம் மற்றும் அவரது தந்தை சங் யில் வைத்ததுதான் சட்டம். இரும்புத்திரை கொண்ட நாடு என்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பது வெளி உலகுக்குத் தெரியாது.

      கிம் ஐ பார்த்து கேள்வி கேட்கக்கூட யாருக்கும் தைரியம் அங்கு கிடையாது. அவராக பார்த்து என்ன சொல்கிறாரோ அதுதான்.. அவ்வளவுதான்.. ஷின் எதுவும் பேசாமல் இருந்தார். வடகொரியாவில் தயாரிக்கப்படும் படங்கள் அத்தனை சிறப்பானதாய் இல்லை.. உங்கள் திரைப்படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. எனவே நீங்கள் எங்கள் நாட்டிலேயே தங்கியிருந்து சில படங்களை இயக்கவேண்டும்என்றார் கிம். மறுபேச்சு பேசினால் என்ன நடக்கும் என்பதை எல்லாம் சொல்லித்தான் அங்கு ஷின்னை அழைத்து வந்திருந்தார்கள். 
      கிம் தனது பிரம்மாண்டமான வீடியோ லைப்ரரிக்கு ஷின்னை அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 19000 உலகத்திரைப்பட வீடியோ கேசட்டுகள் இருந்தன. சில படச்சுருள்களும் இருந்தன. ஷின்னின் அனைத்துப் படங்களின் வீடியோ கேசட்டுகளும் இருந்தன. அங்குதான் Tale of Shimchoeng  என்ற ஷின்னின் படச்சுருள்களும் இருந்தன. ஷின் அந்தப் படத்தின் பிலிம்களை சப்டைட்டில் போடுவதற்காக ஹாங்காங் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது ஹாங்காங் அலுவலகத்துக்கு செல்லாமலேயே அது தொலைந்துவிட்டது. அந்த படச்சுருள்கள் எப்படி கிம்மின் லைப்ரரிக்கு வந்தது என்பது ஆச்சர்யமாக இருந்தது ஷின்னுக்கு. கிம்மின் அதிகார வரம்பு எல்லைத் தாண்டியது என்பது ஷின்னுக்கு புரிந்தது.
      ஷின்னுக்கு உரிய மரியாதை தந்து அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் 24 மணி நேரமும் கண்காணிக்கப் பட்டபடியே இருந்தார். யாரிடமும் எதுவும் பேசமுடியாது. ஏனெனில் அரசாங்க உத்தரவு இல்லாமல் அவர்கள் தண்ணீர் குடிக்கக்கூட வாய்த் திறக்கப் பயந்தார்கள். ஸோய் எங்கிருக்கிறார் என்று ஒரு தகவலும் இல்லை. ஒருவேளை அவர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சினார். எப்படியாவது அங்கிருந்து தப்ப வேண்டும் என நினைத்துக்கொண்டார். அதுவரை கிம் சொன்னபடி திரைப்படங்களை உருவாக்கும் பணியில் இருப்பது என்று முடிவு செய்தார்.
      ஒரு நாள் அவர் திரைப்பட வேலையாக காரில் சென்று கொண்டிருந்தார். அருகில் அரசாங்க காவல் அதிகாரி. கடைத்தெருவில் ஏதோ வாங்குவதற்காக இறங்கியவர். சட்டென தப்பிக்கும் முயற்சியில் நடக்கத் துவங்கினார். ஆனால் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் அரசாங்க அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என்ற விஷயம் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. மூன்றாவது சோதனைச் சாவடியில் அவர் மாட்டிக்கொண்டார். அவ்வளவுதான் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார்.
      ஒரு வகை புல், கொஞ்சம் அரிசி சோறு, கொஞ்சம் உப்பு அவ்வளவுதான் அவருக்கான உணவு. சிறை அதிகாரிகளிடம் முழந்தாளிட்டபடி, தலையை குனிந்து கொண்டுதான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவேண்டும். கடுமையான தனிமைச் சிறை அவருக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. சிறையில் வடகொரியாவின் வீரம், வரலாறு இவற்றை எல்லாம் படிக்கச் சொன்னார்கள். சில சமயம் சக கைதிகளுக்கு வகுப்பெடுத்தார்.
      ரொம்ப நல்ல பிள்ளையாக இருக்கிறார் என்பது தெரிந்து மீண்டும் அவரை கிம் சந்திக்க அழைத்தார். இந்த முறை கண்டிப்பாக தப்பிக்க முயற்சிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியின் பேரில் அவர் திரைப்பட வேலைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டார்.
      வடகொரியாவை பொறுத்தவரை கிம்மின் ஆலோசனை பெறாமல் ஒரு திரைக்கதை கூட அங்கு உருவாகாது. ஆனால் ஷின் சுதந்திரமாக படங்களை இயக்க அனுமதிக்கப்பட்டார். ஷின் கேட்ட அத்தனை உதவிகளும் தரப்பட்டன. அங்கிருந்த போதுதான் அவரது திரைப்பட வாழ்நாளின் மிகச்சிரந்த படம் எனக் கருதப்பட்ட  RUN AWAY உருவானது. ஜப்பான் ஆக்ரமிப்பினால் கொரியர்கள் பட்ட துயரங்களின் வலியை பதிவு செய்த படம் அது. புகழ் பெற்ற கோட்சில்லா படமான PULGASARI யும் வெளியானது.
      கிம்மின் நம்பிக்கையை பெற்ற சில நாளில் அவர் வைத்த விருந்து ஒன்றில் கலந்துகொண்ட போதுதான் ஷின் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸோய்யை சந்தித்தார். கிம்மினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வெளி உலகம் அறியாமல் தனிமையில் உழன்ற லீக்கும் அன்றுதான் பிறரைப்பார்த்து பேச அனுமதித் தரப்பட்டது. கிம் தனது இருபுறமும் ஸோய் மற்றும் ஷின் ஐ நிற்கவைத்து பெருமிதமாய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சொன்னபடி சிறந்த படங்களை இயக்கியதால் லீயுடன் இனி சுதந்திரமாக ஷின் இருக்கலாம் என கிம் அங்கு அறிவித்தார். ஆனால் அதற்கு ஷின் மீண்டும் ஸோய் யூன் ஹி யை மணக்கவேண்டும் என கிம் நிபந்தனை விதித்தார். ஆக அங்கு மறுபடி அவர்களுக்குத் திருமணம் நடந்தது.
      தொடர்ந்து கிம்மின் நம்பிக்கையைப் பெற சில படங்களை இயக்கினார் ஷின். இருவரும் சரியான சந்தர்ப்பத்தில் தப்பிக்க முடிவு செய்திருந்தனர். ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 1986-இல் நடக்கும் படவிழாவில் கலந்து கொண்டு வட கொரிய படங்களுக்கான ஒரு மார்க்கெட்டிங்- ஐ செய்தால் உலகம் முழுக்க அது கவனத்தை ஈர்க்கும் என ஷின் ஒரு யோசனையை கிம்மிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்ப கிம் ஒப்புக்கொண்டார்.
      வியன்னாவில் இருந்தபடி தப்பிப்பது எளிது என்பதால் அதற்கானத் திட்டத்தை நிதானமாக இருவரும் வகுத்தனர். தங்களுக்கு அறிமுகமான ஜப்பானிய திரைப்பட விமர்சகர் ஒருவர் மூலம் வியன்னாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைய முன்கூட்டி அனுமதி பெற்றனர். தப்பிப்பதற்கு முன் தங்களை கிம்தான் கடத்தினார் என்பதற்கு ஆதாரம் வேண்டுமே, இல்லை என்றால் உலகம் நம்பாது. முக்கியமாக தென்கொரிய மக்கள் நம்பவே மாட்டார்கள். ஆகவே ஸோய் ஒரு சிறிய ரக டேப் ரெக்கார்டரை ரகசியமாக வாங்கினார். கிம் ஐ அடுத்த முறை சந்திக்கும்போது அவரோடு உரையாடுவதை ரகசியமாக பதிவு செய்வது என தீர்மானித்து ஸோய்யின் ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டார். வடகொரியாவை பொறுத்தவரை அது மரணத் தண்டனையைத் தருமளவு மாபெரும் குற்றம். ஏனெனில் அதற்கு முன்னர் கிம்மின் இரண்டே இரண்டு குரல் பதிவுகள்தான் வெளி உலகுக்குத் தெரியும். ஒருமுறை அவர் இராணுவ வீரர்களுக்கான கூட்டத்தில் உரையாடியது, மற்றொன்று ஒரு விளையாட்டு விழாவில் பேசியது.  இரண்டையும் வடகொரிய அரசுதான் வெளியிட்டு இருந்தது.
      மிகுந்த ஆபத்தான சூழலில் அந்தக் குரல் பதிவு ஸோய்யினால் செய்யப்பட்டது. இருவரும் வியன்னா கிளம்பினார்கள். அங்கு அவர்கள் தங்கியிருந்த விடுதி வரவேற்பாளருக்கு துண்டுச் சீட்டில் தாங்கள் தஞ்சமடையும் விபரத்தை எழுதி அமெரிக்க தூதரகத்தில் சேர்க்க வைத்தனர். அவர்கள் சென்ற காரை பின்னிருந்து வடகொரிய அதிகாரிகள் வேறொரு காரில் கண்காணித்தபடி தொடர்ந்தனர். ஒரு சிக்னலில் சாமர்த்தியமாக  பின் தொடர்ந்தவர்களை தனிமைப் படுத்திவிட்டு ஷின் மற்றும் ஸோய் இருந்த காரை அமெரிக்கத் தூதரகம் நோக்கி வேகமாக செலுத்தினார் ஓட்டுனர். அங்கே தயாராக இருந்த ஜப்பானிய விமர்சகர் அவர்களை அழைத்துச் சென்று அமெரிக்க தூதரிடம் சேர்ப்பித்தார்.
      கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகு அவர்கள் சுதந்திரக் காற்றை அனுபவித்தனர்.  இந்த எட்டு ஆண்டு இடைவெளியில்  5 ஆண்டுகள் சிறையில் இருந்தாராம் ஷின்.. 7 திரைப்படங்களையும், சில அரசாங்கப் படங்களையும்  வடகொரியாவுக்காக இயக்கித் தந்தார் ஷின். அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைந்த ஷின் சில வருடங்கள் அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படங்களை இயக்கினார். அங்குதான் நிஞ்சா திரைப்படங்களை தொடர்ச்சியாக உருவாக்கினார் ஷின்.
      ஆனால் கிம் அதற்குப்பிறகு ஷின் ஐ தொல்லைப்படுத்தவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் இது பற்றி அவரிடம் கேட்டபோது ஷின் மிகத் திறமையான இயக்குனர். அவரை அமெரிக்காதான் கடத்திக்கொண்டு போய் இப்பொழுது அருமையான திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறதுஎன்று ஜாலியாக சொல்லிவிட்டு போய்விட்டார்.
      தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு கும்பல் ஒரு நடிகையை கடத்திவைத்திருக்கும் படத்தையும், மற்றொரு படத்தில் ஒரு தாதா ஒரு இயக்குனரை மிரட்டி படமெடுக்கும் கதையையும் பார்த்திருப்பீர்கள். அந்த சம்பவங்கள் இரண்டுமே ஷின் மற்றும் லீயின் வாழ்வில் நிஜமாகவே நடந்ததுதான்.
      தென்கொரியாவின் அரசியல் நிலைமை சீரானதும் 1994 இல் இருவரும் தென்கொரியா திரும்பினர்.  கடத்தல் சம்பவம் குறித்துக் கேட்டபோது ஷின் நகைச்சுவையாக விவாகரத்து ஆன பின்னர் ஸோய் திரும்பவும் என்னுடன் சேர விரும்பியிருந்தால் நேரடியாக என்னிடம் தெரிவித்திருக்கலாம். கிம் ஜோங் யில் லிடம் சொல்லிவிட்டார் போலும் அவர் எங்களைத் தூக்கிப்போய் திருமணம் செய்து வைத்துவிட்டார்என்றாராம்..
      வாழ்க்கை பல சமயம் கற்பனையையும் விஞ்சி சுவாரசியங்கள் மிகுந்தது என்பது ஷின் மற்றும் லீ யின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன இல்லையா
        

      

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சயனைடு அருந்தி சாவை வென்ற முதல் பெண்போராளி


                  பிரித்திலால்
தினசரி பத்திரிகைகளை வாசிப்பவர்கள், சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் 10-ம் தேதி பினோத் செளத்ரி என்கிற விடுதலைப் போராட்ட வீரர் தனது 103-வது வயதில் கல்கத்தாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்திருக்கக் கூடும்.
      சுதந்திரத்துக்குப்பின் வங்கதேச குடிமகனாக வாழ்ந்தாலும் மரணத்தின்போது மறுபடி இந்திய மண்ணில் சில நாட்கள் இருந்த பினோத் செளத்ரி, ‘சிட்டகாங் ஆயுதப் பறிப்பு' சம்பவத்தில் ஈடுபட்ட போராளிகளில் நம்மிடமிருந்த கடைசி வீரர். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில்வங்கத்திலிருந்து வெவ்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் வெவ்வேறு அணுகுமுறைகளில் இயங்கியவர்கள் பலர். அதில் மிக முக்கியமானவர் சூரியாசென். குரு அண்ணா' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட சூரியாசென், அவர் வாழ்ந்த காலத்தில் தீரமான பல நடவடிக்கைகளை பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக செயல்படுத்தியதன் மூலம் வங்க மக்களிடையே ஒரு கதாநாயக அந்தஸ்துடன் உலவியவர்.
      இந்திய புரட்சிகரப் படை ( ஐ.ஆர்.ஏ.) என்ற பெயரில் ஒரு வீரம் செறிந்த இளைஞர் படை அவர் தலைமையின் கீழ் இயங்கியது. அரக்கத் தனமான பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளின் மீது தாக்குதல், ஆயுதக் கிடங்குகளைத் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களைப் பறித்துச் செல்லுதல், இந்தியர்களை அவமானப் படுத்தும் பிரிட்டிஷாரின் குடியிருப்புகளின் மீது தாக்குதல் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது சூரியாசென்னின் ஐ.ஆர்.ஏ. படை. அவர்களின் மிக முக்கியமான தாக்குதல்களில் புகழ்பெற்றது 1930-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற சிட்டகாங் ஆயுதப் பறிப்பு சம்பவம். அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றவர்களில் ஒருவர்தான் பினோத் செளத்ரி.
      ஐ.ஆர்.ஏ. -ஐ துவக்கிய சூரியாசென் 1894-ம் ஆண்டு மார்ச்-22-ம் தேதி சிட்டகாங் மாவட்டத்தில் (இன்றைய வங்க தேசத்தில் உள்ளது) போல்காலி என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை ரமணி ரஞ்சன் சென் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதால், சூரியாசென்னையும் ஆசிரியராக்க விரும்பி, உயர்கல்வியில் சேர்த்தார்.
      1916-ல் பெஹராம்பூர் கல்லூரியில் சூரியாசென் பி.ஏ. முடித்தார். அவர் படிக்கும் காலத்தில் இந்திய சுதந்திர வேட்கை கொண்ட ஜுஹாந்தர் குழு பற்றி அறிந்தார். ஆயுத வழி போராட்டங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜுஹாந்தர் குழுவின் அவ்வப்போதைய நடவடிக்கைகள் அவரை ஈர்த்தன. சந்தன்பூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியிலிருந்தாலும் அவரது மனம், சுதந்திரப் போராட்டங்களின் மீதே சுற்றிச் சுழன்றது. எனவே, தன்னோடு ஒத்த கருத்துக் கொண்ட இளைஞர்கள், குறிப்பாக பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஐ.ஆர்.ஏ. என்ற அமைப்பை துவங்கினார்.

      கிரேக்' என்ற பிரிட்டீஷ் காவல்துறை ஐ.ஜி. இந்தியர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதில் பிரதானமானவனாய் இருந்தான். அவனுக்கு முன்பாக இந்தியர்கள்  நடந்து செல்வது கூட குற்றமாகக் கருதப்பட்டது. அப்பாவி இந்தியர்களை, அடித்துத் துன்புறுத்துவது அவனது பொழுதுபோக்காக இருந்தது. சூரியாசென்னின் முதல் குறி கிரேக்' மீதே இருந்தது. கிரேக்கைக் கொல்வதன் மூலம் மற்ற பிரிட்டீஷ் அதிகாரிகளை அச்சுறுத்த முடியுமென்று சூரியாசென் உறுதியாக நம்பினார்.
      கிரேக்கைக் கொல்வதற்கு ஐ.ஆர்.ஏ. -வில் இணைந்த இராமகிருஷ்ண பிஸ்வாஸ் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோரை நியமித்தார். அவர்களிருவரும் நடத்திய தாக்குதலில், கிரேக்குடன் வந்த சந்த்பூர் காவல்துறை கண்காணிப்பாளர்  இறந்தார். ஆனால், கிரேக் தப்பிவிட்டான். பிஸ்வாஸும்,சக்ரவர்த்தியும் பிடிபட்டனர். பிஸ்வாஸுக்கு தூக்கு தண்டனையும் சக்ரவர்த்திக்கு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. அன்றிலிருந்து சூரியாசென் தேடப்படும் குற்றவாளியாக, பிரிட்டீஷ் அரசின் மிக முக்கிய இலக்காக கருதப்பட்டார்.
      அவரது திட்டம் காரணமாக கிரேக் தப்பி விட்டாலும் சற்று மிரண்டு போனான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சம்பவத்திற்குப் பிறகு காவல் துறை அதிகாரிகள் இந்தியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள யோசித்தனர். இதன் காரணமாக சூரியாசென் வங்க மக்களிடம் பிரபலமானார். அவரது இயக்கத்தில் சேர இளைஞர்கள் பலரும் துடித்தனர்.
      உயிரைத் துச்சமென மதித்து தங்களை விடுதலை வேள்வியில் இணைத்துக் கொள்ள இளைஞர்கள் பலர் முன் வந்தாலும் ப்ரீத்திலதா வதேதார் மற்றும் கல்பனா தத்தா ஆகிய இரண்டு இளம் பெண்களின் அர்ப்பணிப்பு இன்றைய சமூகம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
      கல்பனா தத்தா, 1913-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிட்டகாங் மாவட்டத்தில் போல்காலி உபாசிலா வட்டத்தைச் சார்ந்த ஸ்ரீபுர் என்கிற மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சிட்டகாங்கில் முடித்து விட்டு, கல்கத்தாவிலுள்ள பெதுனே கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தார். படிக்கும் காலத்திலேயே ஷக்திசங் எனப்படும் மகளீர் பொதுநலக் கழகத்தில் இணைந்து பல பொதுநலப் பணிகளில் ஈடுபட்டார். ஒருசில காலம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய கல்பனாவுக்கு, சூரியாசென்னும் அவரது தோழர்களும் பங்குபெற்ற ஐ.ஆர்.ஏ. அமைப்பின் மீது பற்றுதல் ஏற்பட்டது.

      ஐ.ஆர்.ஏ. அமைப்பின் கட்டா கிராமக் கிளையில் இணைந்து விரைவிலேயே சூரியாசென்னின் நம்பிக்கைக்குரிய போராளியாக வளர்ந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஐ.ஆர்.ஏ. நடத்திய சிட்டகாங் ஆயுதப் பறிப்பு வரலாற்றில் தடம்பதித்த மிக முக்கிய நிகழ்வாகும். 1930-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி ஐ.ஆர்.ஏ.-வின் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஐந்து குழுவாகப் பிரிந்தனர். மிகச் சரியாக அன்றிரவு பத்து மணிக்கு, ஒரு குழு கணேஷ் குப்தா தலைமையில் தம்பராவில் உள்ள ஆயுதக் கிடங்கைத் தாக்கி, அங்குள்ள ஆயுதங்களைக் கைப்பற்றினர். மற்றொரு குழு, லோக்நாத் பால் தலைமையில் சிட்டகாங்கின் இன்றைய சர்க்யூட் ஹவுசுக்கு அருகே இருந்த ஆயுதக் கிடங்கைத் தாக்கினர்.
      ஒரு குழு பிரிட்டிஷார் அதிகம் புழங்கும், யூரோப்பியன் கிளப்பைத் தாக்கியது. மற்றொரு குழு நங்கல் கோட் மற்றும் தாம் இரெயில் நிலையத்தில் இருந்த தொழில்நுட்பத் தொடர்புகளைத் துண்டித்து இரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. மேலும் ஒரு குழு சிட்டகாங் நகரெங்கும் தங்களது தாக்குதல் நோக்கம் பற்றியும் தேச விடுதலைக்கான அவசியம் குறித்தும் விளக்கிய துண்டறிக்கைகளை விநியோகித்தது. கல்பனா தத்தா தலைமையிலான ஒரு குழு  தொலை தொடர்புகளை, வெற்றிகரமாகத் துண்டித்தது. கிட்டதட்ட இரண்டு நாட்கள் பிரிட்டிஷ் அரசு செயலிழந்து போனது.
      அனந்த் சிங் மற்றும் கணேஷ் குப்தா ஒரு வண்டியிலும், சூர்யா சென் மற்றொரு வண்டியிலும் ஆயிரக்கணக்கான ஆயுதங்களை அள்ளிச்சென்றனர். வெறியுடன் அலைந்த பிரிட்டிஷ் படை சூர்யா சென்னும் அவரது தோழர்களும் மறைந்திருந்த ஜலாலாபாத் மலைப்பகுதியை சுற்றி வளைத்தது. சூர்யா சென், கல்பனாதத்தா மற்றும் முக்கிய தலைவர்கள் தப்பிவிட்டனர். ஒரு சில தொண்டர்கள் கைதானார்கள்.
      கல்பனா தத்தா பலபகுதிகளில் சுற்றி திரிந்துவிட்டு இறுதியாக 1933 ஆம் வருடம் பிடிபட்டார். கடுமையான சிறைவாசத்துக்குப்பிறகு 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 1940=இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1943 ஆம் ஆண்டு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக இருந்த பூரன் சந்த் ஜோஷியை மணந்தார். 1995-இல் இறந்து போன கல்பனா தத்தாவுக்கு சந்த் மற்றும் சூரஜ் சந்த் என்று இரண்டு மகன்கள். சந்த்-இன் மனைவி மானினி எழுதிய do and die நூல் சிட்டகாங் ஆயுதபறிப்பு சம்பவம் பற்றியது.
      பிரிட்டிஷ் படையை மேலும் அச்சுறுத்துவதற்காக தேவி பிரச்சாத் குப்தா, மனோரஞ்சன் தாஸ், சுதேஷ் ராய், பானிந்திர நந்தி, சுபோத் சௌத்ரின் ஆகியோர் ஐரோப்பிய குடியிருப்புகள் மீது சரமாரியாக தாக்கினர். இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. சுபோத் சௌத்ரி, பானிந்திர நந்தி கைது செய்யப்பட்டனர் ஏனையோர் கொல்லப்பட்டனர். ஐ.ஆர்.ஏ வின் மற்றொரு முக்கியமான தாக்குதல் பஹர்தலி கேளிக்கை விடுதி தாக்குதல்' ஆகும். அந்த கேளிக்கை விடுதியில் இந்தியர்களுக்கும், நாய்களுக்கும் அனுமதியில்லை' என்று ஒரு அறிவிப்பு பலகையை திமிர் பிடித்த பிரிட்டிஷ் பிரஜைகள் வெளியே தொங்கவிட்டிருந்தனர். அதைக்கண்டு ஐ.ஆர்.ஏ.வின் தீரமிக்க வீராங்கனையாக விளங்கிய பிரித்தீலால் வதேதார்க்கு குருதி கொதித்தது.
      1911 ஆம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி சிட்டகாங் மாவட்டம் தால்காட் கிராமத்தில் பிறந்த பிரித்திலால் வதேதாரின் தந்தை நகர நிர்வாக அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்தார். பிரித்திலால், கல்பனா தத்தாவின் பள்ளித்தோழி. படிக்கும் காலத்தில் அவரது பிரியத்துக்குரிய ஆசிரியை உஷா டேராணி லக்குமிபாயின் வீரமிக்க வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாக அடிக்கடி சொல்லி வந்தார். அதுவே அவர்  ஐ.ஆர்.ஏவில் இணைய காரணமாயிற்று. சிட்டகாங் ஆயுத பறிப்பு சம்பவத்துக்குப்பிறகு இயக்கம் தோய்வடைந்து விடவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, பஹர்தலி கேளிக்கை விடுதி தாக்குதலை பிரித்திலால் திட்டமிட்டார்.
      1932 செப்டம்பர் மாதம் 23-ந்தேதி பிரித்திலால் பஞ்சாபி ஆண் வேடம் புனைந்தார். அவரோடு காளிசங்கர் ராய், பிரபுல்ல தாஸ், பினேஷ்வர் ராய், சாந்தி சக்கரவர்த்தி ஆகியோர் வேட்டி சட்டையிலும், மகேந்திர சௌத்ரி, சுஷில் டே, பன்னா சென் ஆகியோர் லுங்கி சட்டையிலுமாக தனித்தனி குழுவாக நான்கு புறத்திலும் விடுதிக்குள் நுழைந்தனர். பிரிட்டிஷ் போலிஸ் எதிர்பாராத தருணத்தில் தங்கள் தாக்குதலை நடத்தினர். திருப்பி போலிசாரும் சுட அதில் ஒரு குண்டு பிரித்திலால் மீது பாய்ந்தது. அவர் நகரமுடியாத அளவுக்கு இரத்தம் வெளியேற எப்படியோ தவழ்ந்து சென்று ஒரு இடத்தில் மறைந்துகொண்டார், மற்றவர்கள் தப்பிவிட்டனர். மிகப்பலவீனமான நிலையில் இனி தன்னால் தப்பிக்க முடியாது என்று முடிவு செய்த பிரித்திலால் பிரிட்டிஷாரிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற உறுதியில் தயாராய் வைத்திருந்த சயனைட் அருந்தி மரணமுற்றார்.
      ஒரு இரவு முழுவதும் பனியில் கேட்பாரற்றுக் கிடந்த அவரது உடல் மறுநாள் காலையில்தான் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு சோதனையில்தான் அவர் சயனைட் அருந்தி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய சுதந்திர வரலாற்றில் எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரை துச்சமென தூக்கி எறிந்திருக்கின்றனர். இருப்பினும் சயனைட் அருந்தி உயிர்விட்ட முதல் வீராங்கனை பிரித்திலால்தான்.

      ஐ.ஆர்.ஏ வின் பிற உறுப்பினர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பிடிபட்டாலும், சூர்யா சென் மட்டும் பால்காரராக, கூலித்தொழிலாளியாக, இஸ்லாமியராக பல்வேறு வேடங்களில் சுற்றித்திரிந்தார். கடைசியில் நேத்ரா சென் என்ற பணத்தாசைப் பிடித்த கருங்காலி ஒருவன் 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, அவரை காட்டிக்கொடுத்துவிட்டான். சூர்யா சென்னின் மீது அதீத பாசம் கொண்ட அவரது தொண்டர்களில் ஒருவர், நேத்ரா சென்னின் வீட்டுக்குள் நுழைந்து அவனது மனைவியின் கண்ணெதிரிலேயே, அவனது கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டார். இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் நேத்ரா சென்னின் மனைவி அவனுக்கு சூர்யா சென்-ஐ காட்டிக்கொடுத்ததற்காக அறிவிக்கப்பட்ட பரிசு பணத்தை, கையால் தொடக்கூட மறுத்துவிட்டதோடு நேத்ரா சென்-ஐ கொன்றவரை போலீசாருக்கு அடையாளம் காண்பிக்கவும் மறுத்துவிட்டார். இறுதிவரை அவர் யாரென்பது நேத்ரா சென்னின்  மனைவியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. வங்கத்தின் தவப்புதல்வன் சூர்யா சென் எங்கள் மூத்த சகோதரர் அவரைக்கொன்றவனை என்னாலும் மன்னிக்க முடியாது என்று நேத்ரா சென்னின் மனைவி பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்.
      சிறைக்கொடுமைகளில் மிக மோசமாக சித்திரவதைப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியிலிடப்பட்டால், சூர்யா சென்னின் பெயர் பிரதான இடம் பிடித்திருக்கும். அவர் மீது கொண்ட அடங்காத ஆத்திரம் காரணமாக அவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தனர்.அவரது விரல் நகங்கள் பிடுங்கப்பட்டன. எலும்பு மற்றும் நரம்புகள்  உடைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட தினமான ஜனவரி 12, 1934 அன்று அவர் தூக்கு மேடைக்கு நடந்தும் வரும் நிலையில் இல்லாததால், தரதரவென இழுத்து வந்து தூக்கிலிட்டனர்.அதன் பிறகும் வெறி அடங்காத அவர்கள், அவரது உடலை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி கடலில் தூக்கி எறிந்தனர்.
      இறப்பதற்கு சில நாட்களுக்குமுன் தன் நண்பருக்கு சூர்யா சென் அனுப்பிய கடைசிச்  செய்தியில் மரணம் என் கதவைத் தட்டுகிறது. ஆனால் என் மனமோ சுதந்திரக்காற்றைத் தேடி வெளியே அலைகிறது. எனக்கு ஒரு கனவு தோன்றுகிறது. அது தங்கமான கனவு. இந்தியா விடுதலைப் பெறும் பொன்னான கனவு. தோழர்களே அந்தக் கனவை நோக்கி உங்கள் பாதங்களை உறுதியாக வையுங்கள். அதை ஒரு நாள் நிச்சயம் கண்டடைவீர்கள்என்று குறிப்பிட்டிருந்தார்.

      நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக்காற்றில், அவர்களின் கதறல்களும், ஓலங்களும்  கலந்து எம்மைப் பதறச்செய்கின்றன. கருத்துக்குருடர்களால் அவர்களது வலிமிகுந்த உயிர்க்கசிவை ஒரு போதும் உணரமுடியாது...
              நன்றி  "காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2013

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ரேமுண்டோ கிளேசியர்

கலகக்கார கலைஞர்கள் -8

            

               சிறுகுழந்தைகள் கூட்டம் மிகுந்த சூழல்களில் தொலைந்து போவதும், பின்னர் பதற்றத்துடன் கண்டுபிடிக்கப்படுவதும் அனேகமாக எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்கிற சம்பவம்தான். தொலைந்து போனவர்கள் திரும்பவே இல்லை என்றால் அந்த துயரத்தை யாரால் தாங்கிக் கொள்ளமுடியும்? அதுவும் நல்ல வாலிபமான வயதில், ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கின்ற பொறுப்பில், சமூகத்தின் சொத்தாக விளங்கும் கலைஞனாகவோ, இலக்கியவாதியாகவோ இருந்துவிட்டால் எப்படியான இழப்பாக இருக்கும்?
               தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 1976 க்கும் 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்படியாக தொலைந்து போனவர்களின் எண்ணிக்கை 30000 க்கும் மேற்பட்டவர்கள் என்கிறார்கள். மேற்கண்ட காலகட்டத்தில் அர்ஜெண்டினாவை ஆண்டுவந்த இராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து வந்த சிந்தனையாளர்கள், இடதுசாரிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என பலரும் இதில் அடங்குவர். ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் ரேமுண்டோ கிளேசியரும் அதில் ஒருவர்.

வியாழன், 21 ஜூலை, 2016

பெயரில் என்ன இருக்கிறது?!

பண்டைய ரோமானியர்களின்
பெயர் சூட்டு விழாவும்  பெயரீட்டு முறையும்
வெளியீடு: முகிலன் பதிப்பகம்
                              அடையாறு, சென்னை-20
பேசிட:      96002 44444, 044-24410248
மின்னஞ்சல்: marudurar@yahoo.com
பக்கங்கள்: 136
விலை: ரூ.80/-

      பெயரே இல்லாமல் மனித சமூகம் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் என்னவாக ஆகியிருக்கும்? மனிதர்கள் என்கிற இனமே இல்லாமல் போயிருக்கும்.. நமக்கென்று ஒரு வரலாறு உருவாகியிருக்காது.. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற ஒன்று நிகழ்ந்திருக்காது.. ஏனெனில் மனிதர்கள் என்கிற உயிரினத்துக்கே பெயர் சூட்டும் வழக்கம் இல்லாவிடில்.. நாம் எங்கே இயந்திரங்கள், உபகரணங்கள், வேதியல் தனிமங்கள், உயிரியல் உன்னதங்கள் ஆகியவற்றை வேறுபடுத்தி   பெயரிட்டிருப்போம்..? ஆக பெயர் என்பது வெறுமனே அடையாளம் மட்டுமல்ல.. அது கண்டுணர்தலின் துவக்கம். பெயரிடுதலின் வரலாற்றை ஆய்வதென்பது ஒரு சுவாரசியமான தேடல்.. அத்தகைய சுகமான அவசியமான தேடலை தனது ‘பண்டைய ரோமானியர்களின் பெயர் சூட்டு விழாவும்  பெயரீட்டு முறையும்’ நூலின் மூலம் நம்மையும் அழைத்துக்கொண்டு செய்திருக்கின்றார் மருதூர் அரங்கராசன் அவர்கள்...

      பெயர்கள் குறித்த அதிதீவிரமான சிந்தனை எனக்குள் உண்டு. உலகக் கால்பந்து போட்டிகளைப் பார்க்கும் போது இத்தாலிய அணியின் வீரர்களின் பெயர்கள் மனதுக்கு சற்று ரம்யமாக, நெருக்கமாக இருப்பதை பல நேரம் உணர்ந்திருக்கிறேன்  
     
                  பெயர்-சொல்

பெயரில் என்ன இருக்கிறது
என்று சொன்னாலும்
இன்னொருவரின் பெயர்
                  நன்றாக இருக்கும்போது
அதிருப்தி எழுகிறது
நம் மீது சுமத்தப்பட்ட பெயர் மீது......

     ............பெயர்களை மறப்பவர்கள்
     நினைவைச் சுண்ட நெற்றி சுருக்கி
          ‘சே... நல்ல பேருப்பா...' என்று
     புலம்புகையில்  தோன்றுகிறது
         ‘எல்லோரும் மறக்கட்டும் என் பெயரை...'

 -கல்கியில் பிரசுரமான என்னுடைய கவிதை வரிகள், அந்த எண்ணங்களின் வெளிப்பாடே.. எனவே கூடுதலான அதீத ஆர்வம் இந்த நூலை பார்த்தவுடனே எனக்குள் கிளர்ந்தது. இயல்பிலேயே வரலாற்றை அதிகம் வாசிக்கும் பழக்கமுள்ள எனக்கு இந்த நூல் அரிதாகக்  கிடைத்த பரிசு..
      தலைப்பில் பண்டைய ரோமானிய .. என்று ஒரு புள்ளியில் குவிக்கும் தன்மை இருந்தாலும் நூலாசிரியர், உலகம் தோன்றியதிலிருந்து துவங்கி, சைகை மொழி, எழுத்து, பெயரிடுவதற்கான அவசியம் என ஒழுங்கான வரிசையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தனித்த பெயர்களை உருவாக்கும் முன் எப்படி ஒவ்வொருவரும்  அடையாளப் படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதை தனக்கே உரிய மெல்லிய நகைச்சுவை உணர்வில் அனுமானமாய் சொல்லியிருப்பது அழகு...
      ஒரு தமிழ் உணர்வாளர் வரவு செலவு கணக்கை எழுதினால் அதிலும் பீறிட்டெழும் மொழி உணர்வை எப்படியாகிலும் நுழைத்திட முயலுவாரோ அது போல இன்றைய கனிமொழிகளின் குழந்தைகளுக்கு இடப்படும் வடமொழிப் பெயர்கள் குறித்த ஆதங்கத்தை தனக்கே உரிய அறச்சீற்றத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
      அதே சமயம் அவருள் உலவும் தமிழறிஞர், வரலாற்றுச் செய்திகளை தரும்போதும் சர்க்கரைப் பொங்கலின் நடுவே தட்டுப்படும் முந்திரியைப்போல  கூடவே தமிழிலக்கியங்களை தருவது அத்தனை சுகமான சுவை. இறையனார் அகப்பொருளின் உரை எப்படி வழிவழியாக பரிமாறப்பட்டது என்பதைச் சொல்லும் இடம் அதற்கான உதாரணம்.
      ரோம் என்னும் பெயர் எப்படி வந்திருக்கும் என்பதற்கான அவரது அலசல் பல புதிய விஷயங்களை நமக்கு தந்தபடியே செல்கிறது. இதுநாள் வரை ரோமுலஸ் புராணக்கதையை மட்டும்தான் அதற்கான காரணம் என நான் நம்பியிருந்தேன். எனது ‘பழம் பெருமை பேசுவோம்’ ( விகடன் வெளியீடு ) நூலில் அந்த முழுக் கதையும் அத்திப்பழம் பற்றியக் கட்டுரையில் உள்ளது. (ரோம் சாம்ராஜ்யத்தை  ஆண்டுவந்த நியுமிட்டர் என்ற அரசனின் மகள் ரியோ சில்வியா. நியுமிட்டரின் சகோதரன் அமோலியஸ் தந்திரமாக நியுமிட்டரைக்கொன்று ஆட்சியை பிடித்துவிடுகிறான். கொடுங்கோலனான அமோலியஸ் தனக்கு எதிராக அரசக்குடும்பத்தின் எந்த ஆண் வாரிசும் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறான்.
      அந்த சமயத்தில் ரியோ சில்வியா தான் வணங்கும் மார்ஸ் என்னும் தெய்வத்தை வணங்கி கன்னியாக இருக்கும் போதே கருத்தரிக்கிறாள். ரொமுலாஸ் மற்றும் ரெமுஸ் என இரண்டு ஆண் மகன்களை பெற்றெடுக்கிறாள். அமுலியாஸ் அந்த குழந்தைகள் இருவரையும் கொன்றுவிடும்படி கட்டளை இடுகிறான். ஆனால் எப்படியோ அவனது கண்களுக்குப்படாமல், தனது குழந்தைகளை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் மிதக்கவிடுகிறாள். அந்த பேழை மெல்ல ஒரு கரையில் ஒதுங்குகிறது. கிட்டத்தட்ட நம்ம மகாபாரதக் கதை மாதிரியான கதை) இது புராணம் சார்ந்தது ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல பொருத்தப்பாடுகள் உள்ள சரித்திரச் சான்றுகள், கிரேக்க மொழியில் அர்த்தம் நிறைந்த அந்த சொல்லின் மகத்துவம் என பல்வேறு புதிய செய்திகளை மின்னல் வெட்டு போல அடுக்கிக்கொண்டே போகிறார்.
      பெயர் பதிவுகளை செய்த சீசர் அகஸ்டஸ் பற்றி நாம் அட! என வியந்து கொண்டிருக்கும்போதே ஆதரவற்ற குழந்தைகளைப் பற்றியும் பதிவை செய்த மார்க்கஸ் ஔரெலியஸ் பற்றிய செய்தியை அடுத்த வரிகளில் தந்து திகைப்படைய செய்கிறார். செய்திகளை அள்ளித்தருவதில் அவர் எந்த ஒளிவு மறைவு தந்திரத்தையும் செய்வதே இல்லை. மடைதிறந்த வெள்ளம் போல் அது பாய்ந்து கொண்டே இருக்கிறது.
      ரோமானியரின் பெயர் சூட்டு விழா பலிச்சடங்கு ஆகியவற்றை குறிப்பிடும்போது தமிழ்க் கலாச்சாரத்துக்கும் அவர்களுக்குமான பல ஒற்றுமைகளை, பிரித்து பிரித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் உள்வாங்க முடிகிறது. பெயரிடுதலின் பல வேறுபாடுகளை அழகாக நமக்கு எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறார். குறிப்பாக ரோமானிய ஆண்பால் பெண்பால் பெயர் வித்தியாசங்களை இனி நாம் எளிதாக அடையாளம் காண இயலும் விதத்தில் சுலபமாக பதிவு செய்திருக்கின்றார். பலியிடப்படும் மிருகத்தின் தியாகத்தை மறக்காத நன்றி உணர்வுடன் தம் குழந்தைகளுக்கு பன்றி என்று பொருள்படும் பெயர்களை சூட்டும் ரோமானியர்களின் பண்பு வியப்புக்குரியது. நாம் தின்றுவிட்டு அதனை வசவு சொல்லாக அல்லவா பயன்படுத்துகிறோம்? ரோமானியப் பெயர்களின் தொகுப்புப் பட்டியலை இணைத்திருப்பது சிறப்பு..
      ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு இனத்திலும் புழங்கி வரும் இப்படியான பெயர்கள் பற்றிய ஆய்வும் அறிதலும் அவசியமான ஒன்று. இன்னும் பேசமாட்டாரா என்று நினைக்கும் நேரத்தில் பேச்சை முடித்துவிடும் சாமர்த்தியமும் பழக்கமும் உள்ள மருதூரார், இன்னும் கொஞ்சம் எழுதியிருக்ககூடாதா என்று எண்ணும் சமயத்தில் நூலை முடித்துவிட்டார்.. இது மருங்கூர் கண்ணன் சொன்னது போல அவரது எழுத்துப்பணியில் புதியதொரு பயணம்..உண்மையில் அவர் பெயர் சொல்லும் புத்தகம் ..